திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.22 திருமறைக்காடு (வேதாரண்யம்) - திருவிராகம் பண் - நட்டபாடை |
சிலைதனை நடுவிடை நிறுவியொர்
சினமலி அரவது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி
சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ அவருடல்
குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய
மறைவனம் அமர்தரு பரமனே.
|
1 |
கரமுத லியஅவ யவமவை
கடுவிட அரவது கொடுவரு
வரல்முறை அணிதரு மவனடல்
வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை
இமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில்
மறைவனம் அமர்தரு பரமனே.
|
2 |
இழைவளர் தருமுலை மலைமக
ளினிதுறை தருமெழி லுருவினன்
முழையினின் மிகுதுயி லுறுமரி
முசிவொடும் எழமுள ரியொடெழு
கழைநுகர் தருகரி யிரிதரு
கயிலையின் மலிபவ னிருளுறும்
மழைதவழ் தருபொழில் நிலவிய
மறைவனம் அமர்தரு பரமனே.
|
3 |
நலமிகு திருவித ழியின்மலர்
நகுதலை யொடுகன கியின்முகை
பலசுர நதிபட அரவொடு
மதிபொதி சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு
தவமுயல் தருமுனி வர்கள்தம
மலமறு வகைமனம் நினைதரு
மறைவன மமர்தரு பரமனே.
|
4 |
கதிமலி களிறது பிளிறிட
வுரிசெய்த அதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி
பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி
கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர்
மறைவனம் அமர்தரு பரமனே.
|
5 |
கறைமலி திரிசிகை படையடல்
கனல்மழு வெழுதர வெறிமறி
முறைமுறை யொலிதம ருகமுடை
தலைமுகிழ் மலிகணி வடமுகம்
உறைதரு கரனுல கினிலுய
ரொளிபெறு வகைநினை வொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடு
மறைவனம் அமர்தரு பரமனே.
|
6 |
இருநில னதுபுன லிடைமடி
தரஎரி புகஎரி யதுமிகு
பெருவளி யினிலவி தரவளி
கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி
யெழிலுரு வுடையவன் இனமலர்
மருவிய அறுபதம் இசைமுரல்
மறைவனம் அமர்தரு பரமனே.
|
7 |
சனம்வெரு வுறவரு தசமுக
னொருபது முடியொடு மிருபது
கனமரு வியபுயம் நெரிவகை
கழலடி யிலொர்விரல் நிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ்
வுறவருள் செய்தகரு ணையனென
மனமகிழ் வொடுமறை முறையுணர்
மறைவனம் அமர்தரு பரமனே.
|
8 |
அணிமலர் மகள்தலை மகனயன்
அறிவரி யதொர்பரி சினிலெரி
திணிதரு திரளுரு வளர்தர
அவர்வெரு வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுரு வியபர
னவனுரை மலிகடல் திரளெழும்
மணிவள ரொளிவெயில் மிகுதரு
மறைவனம் அமர்தரு பரமனே.
|
9 |
இயல்வழி தரவிது செலவுற
இனமயி லிறகுறு தழையொடு
செயல்மரு வியசிறு கடமுடி
யடைகையர் தலைபறி செய்துதவம்
முயல்பவர் துவர்படம் உடல்பொதி
பவரறி வருபர னவனணி
வயலினில் வளைவளம் மருவிய
மறைவனம் அமர்தரு பரமனே.
|
10 |
வசையறு மலர்மகள் நிலவிய
மறைவனம் அமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில்
புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை
தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல
அவருல கினிலெழில் பெறுவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |